தொடர்ந்து விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது - ருதுராஜ் கெய்க்வாட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணிகள் தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக இந்த மூன்று அணிகளும் இதுவறைய விளையாடியுள்ள 5 போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்கின்றனர். இதனால் இந்த அணிகளின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ள. குறிப்பாக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி சில போட்டிகளாகவே குறிப்பிட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வருவது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியின் போது காயத்தை சந்தித்த ருதுராஜ் கெய்க்வாட், தற்சமயம் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எம்எஸ் தோனி மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
இந்நிலையில் தொடரில் இருந்து விலகியது குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நான் இந்த சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உங்களது ஆதரவுக்கும் அன்புக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த சீசன் எங்களுக்கு மிகவும் சவாலானதாக அமைந்துள்ளது.
இப்போது எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். நிச்சயம் எங்களுக்கு இது மாற்றம் தரும் என்று நம்பிக்கை உள்ளது. நான் அணி உடனே இருப்பேன். டக்-அவுட்டில் இருந்து அணிக்கு ஆதரவை வழங்குவேன். இந்த தருணத்தில் எங்கள் அணிக்கு உதவ வேண்டுமென விரும்புகிறேன். ஆனால் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. நிச்சயம் இந்த சீசனை சிறந்த முறையில் நிறைவு செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று கூறியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிய 5 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 122 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 14 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு சிஎஸ்கேவின் பேட்டிங்க் ஆர்டர் சோபிக்க தவறிவரும் நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.