SMAT 2023: சதமடித்து மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட்; மகாராஷ்டிரா அபார வெற்றி!

Updated: Wed, Oct 25 2023 19:43 IST
Image Source: Google

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் முதலே சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமான ஃபார்மில் இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 590 ரன்களை குவித்தார் ருதுராஜ் கெய்க்வாட். இதனைத் தொடர்ந்து திருமணம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான மாற்று வீரராக இங்கிலாந்து பயணம் செல்ல முடியவில்ல.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் ஆசிய போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய ருதுராஜ் கெய்க்வாட் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்த ஃபார்மை சையத் முஷ்டாக் அலி தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து வருகிறார். ஏற்கனவே பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி மிரட்டியுள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது.

விதர்பா அணி தரப்பில் துருவ் சோரே 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து அசத்தினார். மகாராஷ்டிரா அணி தரப்பில் சத்யஜித் 4 விக்கெட்டுகளையும், பிரசாந்த் சொலங்கி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - கேதர் ஜாதவ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் கேதர் ஜாதவ் 17 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உட்பட 102 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இவரது அதிரடியால் மகாராஷ்டிரா அணி 16.1 ஓவர்களிலே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::