SA vs IND: பும்ராவுக்கு கணுக்காலில் காயம்; போட்டியில் பங்கேற்பாரா?
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியது. இன்று இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்ததால் 49 ரன்களுக்கு மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசி வருவதால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் பும்ரா தனது 6ஆவது ஓவரை வீசியபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. பந்துவீசி முடிக்கும்போது கால் இடறியதால் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக ஓய்வறைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். மேலும் அவருக்கு மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் பீல்டிங் செய்து வருகிறார். இத்தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது.