தொடரும் கோலியின் சறுக்கல்; சதமடித்து முழுவதுமாக இரண்டு ஆண்டுகள் கடந்தன!
2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70ஆவது சதம்.
அன்றைய தினம் யாராவது ஒருவர், அடுத்த இரு வருடங்களுக்கு விராட் கோலி ஒரு சதமும் அடிக்க மாட்டார் எனக் கூறியிருந்தால் அதை நம்பியிருப்போமா?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் ஒரு அரை சதம் கூட எடுக்கவில்லை விராட் கோலி. முதல் இன்னிங்ஸில் 35 ரன்கள் எடுத்த கோலி, இன்று 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆக, இம்முறையும் சதமில்லை. 2020, 2021 என இரு வருடங்களிலும் கோலியால் ஒரு சதமும் அடிக்க முடியவில்லை.
விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது. ஒரு சதமாவது அடித்தால் நல்லது என்கிற நிலைக்கு ரசிகர்கள்ள் வந்துவிட்டார்கள்.
கோலி சதமடிக்காமல் இருந்த காலகட்டம்
- 60 இன்னிங்ஸ் - நவ. 2019 - தற்போது வரை
- 25 இன்னிங்ஸ் - பிப். 2014 - அக். 2014
- 24 இன்னிங்ஸ் - பிப். 2011 0 செப். 2011
கோலியின் கடைசி 60 இன்னிங்ஸ்: 2078 ரன்கள், அரை சதங்கள் - 20 (அதிகபட்சம் 94*).
ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக ஆகஸ்ட் 2019-இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்தார். ஆனால் அதன்பின் இன்றுவரை அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சதம் அடிக்கவில்லை. மேலும் டி20 கிரிக்கெட்டிலும் அவர் சதம் விளாசியது கிடையாது.