SA vs AUS, 1st T20I: சங்கா, ஸ்டொய்னிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!

Updated: Thu, Aug 31 2023 01:00 IST
SA vs AUS, 1st T20I: சங்கா, ஸ்டொய்னிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா! (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  இதில் டிராவிஸ் ஹெட் 6 ரன்களுக்கும், மேத்யூ ஷார்ட் 20 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் ஒரு ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் இணைந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிம் டேவிட் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்த நிலையில், டிம் டேவிட் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆரோன் ஹார்டியும் தனது பங்கிற்கு 23 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 13 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 92 ரன்களைக் குவித்தார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்களைக் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லிஸாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஷம்ஸி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

பின்னர் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட அதிரடி வீரர்கள் கேப்டன் ஐடன் மார்க்ரம், டெவால்ட் பிரீவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சென் என அனைவரும் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரரான தன்வீர் சங்கா பந்துவீச்சில் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரீஸா ஹென்றிக்ஸ் தனது 14ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு, 56 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அறிமுக வீரர் தன்வீர் சங்கா 4 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை