SA vs IND, 1st ODI: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் சரணடைந்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போலண்ட் பார்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ரஸ்ஸி வெண்டர் டுசென் 129 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 110 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 297 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் கேஎல் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - விராட் கோலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஷிகர் தவன் அரைசதம் கடந்தார்.
பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினர்.
மறுமுனையில் அரைசதம் கடந்த விராட் கோலியும் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தப்ரைஸ் ஷம்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின் என அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் இந்திய அணியின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் ரசிகர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் ஷர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
இருப்பினும் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் ஷர்துல் தாக்கூர் 50 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்ஸி, பெஹ்லுக்வாயோ தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.