பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. துணை கேப்டன் ராகுல் 122, ரஹானே 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் 2ஆவது நாளான இன்று மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. காலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்ததால் உணவு இடைவேளை ஒரு மணி நேரத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. நடுவில் மழை நின்றாலும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
மதியம் 12 மணிக்கு மழை நின்று வெயில் அடித்தது. இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதியம் 12.30 மணிக்கு மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் 2ஆவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.