SA vs IND, 2nd ODI: டி காக், மாலன் அதிரடியால் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 85 ரன்களையும், கேஎல் ராகுல் 55 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஷம்ஸி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் - ஜென்னமென் மாலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் அடித்தனர்.
அதன்பின் 78 ரன்களில் டி காக் வெளியேற, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மாலன் 91 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார்.
அடுத்து வந்த கேப்டன் டெம்பா பவுமா தனது பங்கிற்கு 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த வெண்டர் டுசென் - ஐடன் மார்க்ரம் இணை பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. அந்த அணியில் ஐடன் மார்கரம் 37 ரன்களுடனும், வெண்டர் டுசென் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.