SA vs IND, 2nd T20I: ஸ்டப்ஸ், கோட்ஸி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

Updated: Sun, Nov 10 2024 23:27 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று (நவம்பர் 10) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில், 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூர்யகுமார் யாதவும் 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையை கட்ட, இந்திய அணி 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த திலக் வர்மா மற்றும் அக்ஸர் படேல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் திலக் வர்மா 20 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய அக்ஸர் படேல் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங்கும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா சில பவுண்டரிகளை விளாசி அணியை நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களைச் சேர்த்தார். 

அவருடன் இணைந்து விளையாடிய அர்ஷ்தீப் சிங் 7 ரன்களை எடுக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, அண்டில் சிமெலெனே, கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இதில் ரிக்கெல்டன் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரமும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸும் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய வீரர்கள் சோபிக்க தவறினர். 

அந்தவகையில் அணியின் நட்சத்திர வீரர்கள் மார்கோ ஜான்சன் 7 ரன்களுக்கும், ஹென்ரிச் கிளாசென் 2 ரன்களுக்கும், டேவிட் மில்லர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து வருன் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 66 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஸ்டப்ஸுடன் இணைந்த ஜெரால்ட் கோட்ஸி அதிரடியாக விளையாட அணியின் வெற்றியும் உறுதியானது. அதிலும் குறிப்பாக அந்த அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்டப்ஸ் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசினார். 

Also Read: Funding To Save Test Cricket

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை