SA vs IND, 3rd ODI: சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் அபாரம்; தொடரை வென்று இந்திய அணி சாதனை!

Updated: Fri, Dec 22 2023 00:16 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ராஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டார். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் - ராஜத் பட்டிதார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனது அறிமுக போட்டியிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சரையும் விளாசினார். அதன்பின் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்கள் எடுத்த நிலையில் ராஜத் பட்டிதார் விக்கெட்டை இழக்க, கடந்து இரண்டு போட்டிகளில் அரைசதம் கடந்திருந்த சாய் சுதர்ஷன் வெறும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - கேப்டன் கேஎல் ராகுல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் கேஎல் ராகுல் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

அவருடன் இணைந்த திலக் வர்மாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் 200 ரன்களைக் கடந்தது. இதில் திலக் வர்மாவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. பின் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 51 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மா அதிரடியாக விளையாட முயன்று விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடியைக் கொடுத்ததுடன், தேர்வு குழுவினருக்கும் தனது திறமையை நிரூபித்தார். அதிலும், பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் டெண்டுகர், ராகுல் டிராவிட்டிற்கு பிறகு சதமடித்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றார். 

அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 108 ரன்களை விளாசிய சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அக்ஸர் படேல் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு 14 ரன்களைச் சேர்க்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 3 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பியூரன் ஹென்றிக்ஸ் 3 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - டோனி டி ஸோர்ஸி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஹென்றிக்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வேண்டர் டுசென் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஸோர்ஸியுடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஸோர்ஸி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 36 ரன்கள் எடுத்திருந்த ஐடன் மார்க்ரம் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டோனி டி ஸோர்ஸி 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்கள் ஹென்றிச் கிளாசென் 21 ரன்களிலும், வியான் முல்டர் ஒரு ரன்னிலும், டேவிட் மில்லர் 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த கேசவ் மகாராஜ் 14 ரன்களுக்கும், லிசாத் வில்லியம்ஸ் 2 ரன்களிலும், பியூரன் ஹென்றிக்ஸ் 18 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை