SA vs IND, 3rd T20I: சதமடித்து அசத்திய திலக் வர்மா; தென் ஆப்பிரிக்காவுக்கு 220 ரன்கள் இலக்கு!

Updated: Wed, Nov 13 2024 22:21 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகாளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து, இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று (நவம்பர் 13) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியிலும் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மீண்டும் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ரமந்தீப் சிங் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் இரண்டாவது விக்கெட்டிற்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்களை எடுத்த கையோடு அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்ப, பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 18 ரன்களைச் சேர்த்த கையோடும், ரிங்கு சிங் 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையிலும் என தங்கள் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ரமந்தீப் சிங் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் தனது வருகையைப் பதிவுசெய்து அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பறக்கவிட்டு அசத்தினார். அதன்பின் ரமந்தீப் சிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்களில் ஆட்டமிழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 8 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என்ன 107 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்டில் சிம்லனே, கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை