SA vs IND, 3rd Test: 209 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது இந்தியா!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிக்களுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 2ஆம் நாள் உணவு இடைவேளையில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.
கீகன் பீட்டர்சன் 40 ரன்களுடனும், வான் டர் டுசென் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். டுசென் 21 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, டெம்பா பவுமாவுடன் இணைந்து பீட்டர்சன் பாட்னர்ஷிப் அமைத்தார். பீட்டர்சன் அரைசதம் கடந்து நம்பிக்கையளித்தார். ஆனால், 28 ரன்கள் எடுத்திருந்த பவுமாவை முகமது ஷமி வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய கைல் வெரீனையும் அதே ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார் ஷமி.
பின் 7 ரன்கள் எடுத்த மார்கோ ஜான்சனை ஜாஸ்பிரித் பும்ரா போல்டாக்கினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 76.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணித் தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.