SA vs IND, 3rd Test: இலக்கை நெருங்கும் தென் ஆப்பிரிக்கா; விட்டுக்கொடுக்காமல் போராடும் இந்தியா!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3ஆம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களை எடுத்தது.
இதில் இந்திய வீரர் ரிஷப் பந்த் சதமடித்ததுடன் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா, இங்கிடி தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் ஐடம் மார்க்ரமை 16 ரன்களில் வெளியேற்றினார் முகமது ஷமி.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் டின் எல்கர் - கீகன் பீட்டர்சன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த இணையை எப்படி பிரிப்பது என தெரியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர்.
இறுதியில் 30 ரன்களைச் சேர்த்த கேப்டன் டீன் எல்கர், பும்ரா பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டுடன் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியிக் கீகன் பீட்டர்சன் 48 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் பும்ரா, ஷமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.