SA vs IND, 3rd Test: ரிஷப் அதிரடி சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு!

Updated: Thu, Jan 13 2022 19:04 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் செவ்வாய் அன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 79 ரன்களும் புஜாரா 43 ரன்களும் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளும் மார்கோ ஆன்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 76.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 14, புஜாரா 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் ஆரம்பித்தவுடன் இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா 9 ரன்களிலும் ரஹானே 1 ரன்னிலும் பவுன்சர் பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். இருவரும் மீண்டும் ரன்கள் அடிக்காமல் ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். 

பிறகு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ரிஷப் பந்த். இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார்கள்.

விராட் கோலி நிதானமாக விளையாட, ரிஷப் பந்த் தன்னுடைய வழக்கமான பாணியில் விளையாடினார். 2ஆவது டெஸ்டில் மோசமான ஷாட்டுக்காக மிகவும் விமர்சிக்கப்பட்ட ரிஷப் பந்த், 58 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எட்டினார். 

இதனால் இந்திய அணி 3ஆம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. 143 ரன்கள் முன்னிலை. ரிஷப் பந்த் 51, கோலி 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ரிஷப் பந்துக்கு நல்ல ஜோடியாக விளங்கிய விராட் கோலி 143 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்கள் எடுத்தார். அதன்பின் இங்கிடி பந்தில் கவர் டிரைவ் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 
பிறகு அஸ்வின் 7, ஷர்துல் தாக்குர் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால் அதிரடியாக விளையாட எண்ணினார் ரிஷப் பந்த். ஒலிவியர் ஓவரில் ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடுத்தடுத்த பந்துகளில் அடித்தார். 

இதன் மூலம் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இறுதியில் ஜஸ்ப்ரித் பும்ரா, மார்கோ ஜான்சன் ஓவரில் சிக்சர் அடிக்க ஆசப்பட்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 67.3 ஓவர்களில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 100 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களும் அடங்கும்.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சன் 4 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மேலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற 212 ரன்களையும் இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை