தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று (நவம்பர் 15) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை மீண்டும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

Advertisement

இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 73 ரன்களைக் கடந்த நிலையில், ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்த சஞ்சு சாம்சன், இப்போட்டியில் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அவருடன் இணைந்த திலக் வர்மா கடந்த போட்டியில் எங்கு விட்டாரோ அதே அதிரடியை இப்போட்டியிலும் தொடர்ந்ததுடன், அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த திலக் வர்மா 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததன் மூலம் இந்திய அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். இந்த தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். 

அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த திலக் வர்மா 41 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைக் கடந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 6 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 109 ரன்களையும், திலக் வர்மா 9 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 120 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியானது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 283 ரன்களைக் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுதோ சிபம்லா மட்டுமே விக்கெட்டை கைப்பற்றினார். 

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டனும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் 8 ரன்களிலும், பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 10 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களில் டேவிட் மில்லரும், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என டிரிஸ்டன் ஸ்டப்ஸும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

பின்னர் களமிறங்கிய மார்கோ ஜான்சென் வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுமுனையில் விளையாடிய ஆண்டில் சிமிலனே 2 ரன்களுக்கும், ஜெரால்ட் கோட்ஸி 12 ரன்களுக்கும், கேசவ் மஹாராஜ் 6 ரன்களுக்கும், சிபம்லா 3 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கோ ஜான்சென் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News