ரபாடா பந்துவீச்சில் எந்த பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது - டீன் எல்கர் புகழாரம்!
ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வென்றது. இதன்மூலம் ஜோஹன்னஸ்பர்க் வான்டரரஸ் மைதானத்தில் கடந்த 30 ஆண்டுகளில் முதல் வெற்றியை தென் ஆப்பிரிக்க அணி பதிவு செய்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான். ரபாடா, ஜேஸன், ஒலிவர் ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை முதல் இன்னிங்ஸில் சிதைத்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் இ்ந்திய அணியை 200 ரன்களில் சுருட்டியதுதான் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முதல்படியாக அமைந்தது.
செஞ்சூரியன் மைதானத்தில் சுமாராகப் பந்துவீசிய ரபாடாவின் பந்துவீச்சில் ஃபயர் தெரிந்தது. அவரின் பந்துவீச்சை சமாளித்து விளையாட இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் முக்கியக் காரணம் என்றாலும், அதில் முதலாமானவர் ரபாடா. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் ரபாடா 13 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறார்.
ரபாடாவின் பந்துவீச்சில் ஃபயர் உண்டானது குறித்து கேப்டன் எல்கர் அளித்த பேட்டியில், “நான் ஆட்டத்தின் முதல் நாளன்று ரபாடாவிடம் சென்று பேசினேன். அதுதான் திருப்புமுனை. அவரிடம் சென்று, நம்முடைய அணியிலேயே மிகவும் மதிப்புக்குரிய வீரராக இருக்கிறீர்கள், இந்த சமயத்தில் நீங்கள் உங்களை நீங்களே சரியாக நடத்தவில்லை.
ரபாடாவின் முழுத்திறமை என்ன என்று எனக்குத் தெரியும். ரபாடாவின் பந்துவீச்சில் மட்டும் தீ பற்றிக்கொண்டால், எந்த பேட்ஸ்மேனும் வந்து பேட் செய்ய முடியாது, உங்களைவிட சிறந்த பந்துவீச்சாளர் யாருமில்லை என்பதும் எனக்குத் தெரியும். இதை நான் உணர்ந்திருக்கிறேன் என்று தெரிவித்தேன்.
ரபாடாவுடன் நான் பேசிய பேச்சு நல்ல பலன் அளித்தது, அவரும் உற்சாகமடைந்தார், மறுநாள் அவர் களத்தில் செயல்பட்டவிதமும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு ஓவரையும் வீசிவிட்டு ஓய்வெடுக்க ரபாடா செல்லும்போது, அவர் பந்துவீச்சை ஆய்வுசெய்தார், பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதை உணர்ந்தவுடன் அந்த மாற்றமும் ஓய்வறையில் ரபாடாவிடம் தெரிந்தது.
ரபாடா பந்துவீசி விக்கெட்டை வீழ்த்திய பின்புதான் தென் ஆப்பிரிக்காவுக்கு வழிபிறந்தது. ஓய்வறையிலேயே ரபாடா மிகுந்த உற்சாகமாக இருந்தார், இது களத்தில் நன்றாகத் தெரிந்தது. அந்த மனநிலையுடன் ரபாடா பந்துவீசினார், அவரின் பங்களிப்பும் மிகப்பெரிய அளவில் இருந்தது. ஒரு கேப்டனாக ரபாடாவை சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். ரபாடாவின் பந்துவீச்சில் தனித்துவமான ஃபயரைப் பார்த்தது மகிழ்ச்சிதான்" என்று தெரிவித்தார்.