SA vs IND: சேவாக்கின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால், கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை சேர்த்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில் மயன்க் அகர்வால் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். புஜாரா டக் அவுட்டானார். கோலி 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் சதமடித்தார். இது கேஎல் ராகுலின் 7ஆவது டெஸ்ட் சதம். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்துள்ளது. ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தொடக்க வீரர் ராகுலுக்கு இது 7ஆவது டெஸ்ட் சதம். இந்த டெஸ்ட்டில் அடித்த சதத்தின் மூலம் அபாரமான சாதனை படைத்துள்ளார். ஆசியாவிற்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கருக்கு (15) அடுத்த இடத்தை பிடித்து கேஎல் ராகுல் சாதனை படைத்துள்ளார்.
ஆசியாவிற்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 4 சதங்கள் அடித்த வீரேந்திர சேவாக் 3ஆம் இடத்தில் உள்ளார். சேவாக்கை விட ஒரு சதம் அதிகமாக அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவிற்கு வெளியே அதிக சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் எனும் சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார்.