SA vs IND: ஜான்சன் த்ரோவை தடுத்து நிறுத்திய பந்த்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களும் அடித்தன.
13 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி ரிஷப் பந்த்தின் அதிரடியான சதத்தின் மூலம் 198 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களை இந்திய அணி இலக்காகவும் நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில் ரிஷப்பும் அஷ்வினும் களத்தில் இருந்தபோது, 2ஆவது இன்னிங்ஸின் 50வது ஓவரை வீசிய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன், அந்த ஓவரின் கடைசி பந்தை வீசிமுடித்தபின், பேட்ஸ்மேனான ரிஷப் பந்தை நோக்கி பந்தை ஆக்ரோஷமாக விட்டெறிந்தார். அதை பேட்டை வைத்து அடித்துவிட்டு, கடுங்கோபத்தை அடக்கி கூலாக நகர்ந்தார் ரிஷப் பந்த்.
பொதுவாகவே சில வேகப்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தமுடியாத நேரத்தில், அவர்களின் கோபத்தை தூண்டிவிடும் விதமாக பந்தை பேட்ஸ்மேன்களுக்கு நேராக விட்டெறிவார்கள். கடந்த போட்டியில் கூட, பும்ராவை வேண்டுமென்றே சீண்டி வம்புக்கு இழுத்தார் ஜான்சன்.
இந்நிலையில், இந்த போட்டியில் ரிஷப்பை சீண்டும் விதமாக பந்தை விட்டெறிந்தார். அதன்பின் அவர் ஜான்சன் வீசிய 65ஆவது ஓவரிலேயே சிங்கிள் எடுத்து தனது 3ஆவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.