SA vs WI, 2nd T20I: ஜான்சன் சார்லஸ் மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவுசெய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக செயப்பட்ட இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது.
அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 51 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜான்சன் சார்லஸ் 39 பந்துகளில் சதமடித்து எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிக்காட்டினார்.
பின்னர் 46 பந்துகளில் 10 பவுண்டரி, 11 சிக்சர்களை பறக்கவிட்ட ஜான்சன் சார்லஸ் 118 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் 28 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரொமாரியோ செஃபெர்ட் 18 பந்துகளில் 41 ரன்களையும் குவித்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களைக் குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.