எஸ்ஏ20 2024: பூரன், ஸ்மட்ஸ் காட்டடி; சன்ரைசர்ஸுக்கு 226 டார்கெட்!

Updated: Sat, Jan 13 2024 22:45 IST
எஸ்ஏ20 2024: பூரன், ஸ்மட்ஸ் காட்டடி; சன்ரைசர்ஸுக்கு 226 டார்கெட்! (Image Source: Google)

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ பிரீட்ஸ்கி - குயின்டன் டி காக் இணை களமிறங்கினர். 

ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்கள் எடுத்திருந்த டி காக் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரீட்ஸ்கியும் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதைனைத் தொடர்ந்து ஜேஜே ஸ்மட்ஸ் - நிக்கோலஸ் பூரன் இணை ஜோடி சேர்ந்தது. இருவரும் இணைந்து எதிரணி பந்துவீச்சை பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர். இதில் ஜேஜே ஸ்மட்ஸ் 29 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 4 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 75 ரன்களை எடுத்திருந்த ஜேஜே ஸ்மட்ஸ் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதுமட்டுமின்றி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 60 ரன்களைச் சேர்க்க, அவருக்கு துணையாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் தனது பங்கிற்கு 13 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் டேனியல் 2 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை