எஸ்ஏ20 2024: ஸ்மட்ஸ், முல்டர் அரைசதன்; சூப்பர் கிங்ஸிற்கு 204 ரன்கள் இலக்கு!

Updated: Sat, Feb 03 2024 22:45 IST
Image Source: Google

இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ப்ரீட்ஸ்கி - டோனி டி ஸோர்ஸி இணை களமிறங்கினர். இதில் மேத்யூ ப்ரீட்ஸ்கி 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டுவைன் பிரிட்டோரியஸ் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டோனி டி ஸோர்ஸியும் 15 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் இணைந்த ஜேஜே ஸ்மட்ஸ் - வியான் முல்டர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். பின் அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

பின் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 55 ரன்களில் ஜேஜே ஸ்மட்ஸ் ஆட்டமிழக்க, 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்களை எடுத்திருந்த வியான் முல்டரும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து வந்த ஹென்ரிச் கிளாசென் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, அவருக்கு துணையாக கீமோ பாலும் ஒரு சில பவுண்டரிகளை அடித்தார். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்ரிச் கிளாசென் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 40 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் லிசாத் வில்லியர்ம்ஸ் 3 விக்கெட்டுகளையும், டக் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை