எஸ்ஏ20 2024: மேத்யூ பிரீட்ஸ்கி அரைசதம்; கேப்பிட்டல்ஸுக்கு 175 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளுர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கி - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரீட்ஸ்கி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த, மறுபக்கம் டோனி டி ஸோர்ஸி 8 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குயின்டன் டி காக் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து இப்போட்டியிலும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
அதன்பின் பிரீட்ஸ்கியுடன் இணைந்த ஹென்ரிச் கிளாசென் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மேத்யூ பிரீட்ஸ்கி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையடைய ஹென்ரிச் கிளாசென் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என ஹென்ரிச் கிளாசென் 30 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 73 ரன்களைச் சேர்த்திருந்த மேத்யூ பிரீட்ஸ்கியும் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கீமோ பால் ரன்கள் ஏதுமின்றியும், வியான் முல்டர் 2 ரன்களுக்கும், கேப்டன் கேசவ் மகாராஜ் 8 ரன்களுக்கும், ஜூனியர் தாலா மற்றும் நூர் அஹ்மாத் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இறுதியில் ஜேஜே ஸ்மாட்ஸ் 21 ரன்களையும், நவீன் உல் ஹக் 10 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுத்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் டேரின் டுபாவில்லன் மற்றும் செனூரன் முத்துசாமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.