எஸ்ஏ20 2024: பட்லர் அதிரடியில் ஜோபர்க்கை வீழ்த்தியது பார்ல்!

Updated: Thu, Jan 18 2024 15:43 IST
எஸ்ஏ20 2024: பட்லர் அதிரடியில் ஜோபர்க்கை வீழ்த்தியது பார்ல்! (Image Source: Google)

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதில். இதில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ரீஸா ஹென்றிக்ஸ் 8 ரன்களிலும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய லூயிஸ் டு ப்ளூய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் அடித்து அசத்தினார். 

ஆனால் அவருக்கு துணையாக விளையாடிய மேட்சன் ரன்கள் ஏதுமின்றியும், மொயீன் அலி 18 ரன்களிலும், ஃபெரீரா 5 ரன்களிலும், ரோமாரியோ செப்ஃபெர்ட் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழக்க, மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெலிப்படுத்திய டூ ப்ளூயும் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ராயல்ஸ் அணி தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - விஹான் லூப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பட்லர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் விஹான் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மில்லரும் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 14.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை