எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பார்ல் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவின் டி20 லீக்கான எஸ்ஏ20 தொடரின் 2ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விஹான் லூப் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்த ஜோஸ் பட்லர் - கேப்டன் டேவிட் மில்லர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜோஸ் பட்லர் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த மில்லர் - வான் ப்யூரன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். மேலும் இருவரும் இணைந்து 140 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணிக்கு பினீஷிங்கைக் கொடுத்தனர்.
இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 8 பவுண்டரி, 3 சிச்கர்களுடன் 75 ரன்களையும், வான் ப்யூரன் 7 பவுண்டரி, 3 சிச்கர்களுடன் 72 ரன்களையும் சேர்த்து அசத்தினர். பிரிட்டோரியா அணி தரப்பில் டுபவிலன், ஜிம்மி நீஷம், ஆதில் ரஷித் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் பிலிப் சால் ரன்கள் ஏதுமின்றியும், தினிஸ் டி ப்யூரன் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமலித்தனர். அதன்பின் இணைந்த வில் ஜேக்ஸ் - ரைலீ ரூஸோவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 147 ரன்களைச் சேர்த்த நிலையில், 10 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 82 ரன்களை எடுத்திருந்த ரைலீ ரூஸோவ் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ரன்களில் வில் ஜேக்ஸும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜிம்மி நீஷம் 20 ரன்களிலும், காலின் இங்ராம் ஒரு ரன்னிலும், கார்பின் போஷ் 10 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை மட்டுமே எடுத்தது.
பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.