எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Fri, Jan 26 2024 11:28 IST
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி! (Image Source: Google)

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பலப்பரீட்சை நடத்தியது. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் அதிரடி தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைன் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால் 20 ரன்களிலும், ரைலீ ரூஸோவ் 13 ரன்களுக்கும், காலின் இங்ராம் 4 ரன்களுக்கும என ஆட்டமிழந்தனர். 

அதன்பின் இணைந்த ஷேன் டேட்ஸ்வெல் - ஜேம்ஸ் நீஷம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை சிறுதுநேரம் தாக்குப்பிடித்தனர். அதன்பின் ஷேன் டேட்ஸ்வெல் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் நீஷம் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.  அதன்பின் களமிறங்கிய வெய்ன் பார்னெல் 13, ஈதன் போஷ் 4 ரன்கலில் என ஆட்டமிழந்தனர்.

இதனால் 18.3 ஓவர்களில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், டேனியல் வோரால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதைத்தொடர்ந்த் எளிய இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஆரம்பம் மீதலே சீரான இடைவேளையின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஆடம் ரோஸிங்டன் 4, டேவிட் மாலன் 6, ஜோர்டன் ஹார்மன் 8, கேப்டன் ஐடன் மார்க்ரம் 3 ரன்கள் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - பேட்ரிக் க்ரூகர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியானலும், அவர்களும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதில் க்ரூகர் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மார்கொ ஜான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்ததும் சன்ரைசர்ஸ் அணியின் தோல்வியும் உறுதியானது. 

அதன்பின் லியாம் டௌசன் ஒருமுனையில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாச, மறுபக்கம் களமிறங்கிய சிமன் ஹார்மர், டேனியல் ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் பார்னெல், ஆதில் ரஷித் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை