எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: ஜோபர்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸை தொடங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - மேத்யூ ப்ரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரீட்ஸ்கி 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த குயின்டன் டி காக்கும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஜேஜே ஸ்மட்ஸ் - பனுகா ராஜபக்சா இணை ஓரளவு தாக்குப்பிடித்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜேஜே ஸ்மட்ஸ் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பனுகா ராஜபக்சா 35 ரன்களி ஆட்டமிழந்தார்.
இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் - வியான் முல்டர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிலும் இப்போட்டியில் சிக்சர்களாக விளாசிய ஹென்ரிச் கிளாசென் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி மிரட்டி வந்த ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய டுவைன் பிரிட்டோரியஸ் 3 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அதேசயம் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வியான் முல்டர் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என தனது அரைசதத்தைப் பதிவுசெய்து சத்தினார். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களைக் குவித்துள்ளது. சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் நந்த்ரே பர்கர் மற்றும் டக் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து லுயிஸ் டு ப்ளூய் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மகான்யாவும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் - மொயீன் அலி இணை அதிரடியாக விளையாட முயற்சித்தனர். இதில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்கள் எடுத்திருந்த மொயீன் அலி ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ரீஸா ஹென்றிக்ஸ் 27 ரன்களுக்கும், அடுத்து வந்த டொனோவன் ஃபெரீரா 24, டக் பிரேஸ்வெல் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் ஜூனியர் தாலா 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக், டுவைன் பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பாண்டு எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.