எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடியது. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜோர்டன் ஹார்மன் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் மாலன் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ஹார்மன் - டாம் அபெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதத்தை நேருங்கிய டாம் அபெல் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜோர்டன் ஹார்மனும் 36 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

Advertisement

பின்னர் களமிறங்கிய மார்கோ ஜான்சென் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.  ஆனால் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்கோ ஜான்சென் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்தா டிரிஸ்டன் ஸ்டப்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.  இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கோ ஜான்சென் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 71 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 22 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களைக் குவித்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் ஜோஸ் பட்லர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோஸ் பட்லரும் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டேவிட் மில்லர் 14 ரன்களிலும், மிட்செல் வான் பியூரன் 9 ரன்களிலும், எவான் ஜோன்ஸ் 2 ரன்களிலும், டேன் விலாஸ் 9 ரன்களிலும், விஹான் லூப் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்ல் ராயல்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News