எஸ்ஏ20 2024: ஹெர்மான் அதிரடி சதம்; கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோர்டன் ஹெர்மான் - டேவிட் மாலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
ஆரம்பவும் முதலே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய இருவரும் எதிரணி பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். மேலும் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 138 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் அமைத்தனர். இதில் டேவிட் மாலன் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையடைய ஜோர்டன் ஹெர்மான் சதமடித்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 106 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது. கேப்டவுன் அணி தரப்பில் கீரேன் பொல்லார்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கெல்டன் அரைசதம் கடந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸி வேண்டர் டுசென் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரியான் ரிக்கெல்டன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சாம் கரண் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய லிவிங்ச்டோன் 2 ரன்களுக்கும், கீரேன் பொல்லார்ட் 24 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டம் சென்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் கரண் 37 ரன்களைச் சேர்த்த நிலையிலும் அந்த அணியால் வெற்றியை ஈட்டமுடியவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜோர்டன் ஹெர்மான் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.