எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஜோர்டன் ஹர்மான் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோர்டன் ஹர்மான் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டாம் அபெலும் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த டேவிட் மாலன் - கேப்டன் ஐடன் மார்க்ரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் கடந்திருந்த டேவிட் மாலன் 63 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஐடன் மார்க்ரம் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் , மார்கோ ஜான்சென், ஹர்மர் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. டர்பன் அணி தரப்பில் கேசவ் மகாராஜ், ஜூனியர் தாலா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கி - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸோர்ஸி 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பிரீட்ஸ்கியும் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய குயின்டன் டி காக் 20 ரன்களுக்கும், ஜேஜே ஸ்மட்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த வியான் முல்டர் - ஹென்ரிச் கிளாசென் இணை அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 38 ரன்களில் வியான் முல்டரும், ஹென்ரிச் கிளாசென் 23 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் மார்கோ ஜான்சென், பார்ட்மென் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.