எஸ்ஏ20 2024: ஸ்டப்ஸ் அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

Updated: Sat, Jan 20 2024 20:40 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி அந்த அணி தொடக்க வீரர்களாக மேத்யூ பிரீட்ஸ்கி - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய பிரீட்ஸ்கியும் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய ஜேஜே ஸ்மட்ஸும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஆனால் மறுமுனையில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் கிளாசெனுடன் இணைந்த வியான் முல்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் அதிரடி காட்டிய வியான் முல்டர், மார்கோ ஜான்சென் வீசிய 19ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சகளை விளாசியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்த கையோடு 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதியில் டுவைன் பிரிட்டோரியஸ் ஒருசில பவுண்டரிகளை விளாசி 23 ரன்களை எடுத்த நிலையில் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஈஸ்டர்ன் கேப் அணிக்கு ஜோர்டன் ஹார்மென் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மாலன் 2 ரன்களுக்கும், டாம் அபெல் ஒரு ரன்னிலும் என ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜோர்டன் ஹார்மெனும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஐடன் மார்க்ரம் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்ரிக் க்ருகெரும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் மார்கோ ஜன்சென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். இதில் ஸ்டப்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 66 ரன்களையும், மார்கோ ஜான்சென் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதமடித்து அணியை வெற்றிபெற வைத்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை