எஸ்ஏ20 2024: வில் ஜேக்ஸ் சதமடித்து அசத்தல்; டர்பன் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா அணிக்கு பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் வில் ஜேக்ஸ் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான பிலிப் சால்ட் 23 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய டி பிருய்ன் 2 ரன்களிலும், ரைலீ ரூஸோவ் 11 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில் ஜேக்ஸ் தனது சதத்தைப் பதிவுசெய்த நிலையில், 8 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 101 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய காலின் இங்ராம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜிம்மி நீஷம், கார்பின் போஷ், வெய்ன் பார்னெல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களைச் சேர்த்தது. டர்பன் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரீஸ் டாப்லீ 3 விக்கெட்டுகளையும், ஜூனியர் தாலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.