எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது சூப்பர் ஜெயண்ட்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கி - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ பிரீட்ஸ்கி 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேன் வில்லியம்சன் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய வியான் முல்டரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட, இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், வியான் முல்டர் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்துள்ளது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஹார்டுஸ் வில்ஜோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஜேஎஸ்கே அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய லூயிஸ் டி ப்ளூய் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் மழை பெய்த காரணத்தால் இப்போட்டியின் இலக்கானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 16 ஓவர்களில் 147 ரன்களாக குவித்தது. அதன்பின் விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 14 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய வியான் லூப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 21 ரன்களிலும், மொயீன் அலி 14 ரன்களிலும், சிபோனெலோ மக்கன்யா 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் களமிறங்கிய டோனோவன் ஃபெரீரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இறுதியில் அவரும் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 16 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே எடுத்தது. சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.