எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து இத்தொடரில் நேற்று நடைபெற்ற வரும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு டேவிட் பெடிங்ஹாம் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களை எடுத்திருந்த டோனி டி ஸோர்ஸி தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் பெடிங்ஹாமும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜோர்டன் ஹார்மன் 12, டாம் அபெல் 10 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் அந்த அணி 75 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 5ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த டிரிஸிடன் ஸ்டப்ஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய மார்கோ ஜான்சன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஇடன் மார்க்ரம் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் அணியில் இம்ரான் தாஹிர், ஹார்டுஸ் வில்ஜோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் 30 ரன்களைச் சேர்த்த நிலையில் டெவான் கான்வே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜேபி கிங், விஹான் லூப், மொயீன் அலி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய எவான் 22 ரன்களையும், ஹார்டுஸ் வில்ஜோன் 14 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் தரப்பில் கிரெய்க் ஓவர்டன், லியாம் டௌசன், ஓட்னீல் பார்ட்மேன் தால 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 32 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இந்த தோல்வியின் மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒருமுறை எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஐடன் மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.