எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சூப்பர் கிங்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபாஃப் டூ பிளெசிஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கான்வேவுடன் இணைந்த லியுஸ் டு ப்ளூய் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இவரும் அபாரமாக விளையாடிய நிலையில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. பின் 22 ரன்களைச் சேர்த்த நிலையில் டெவான் கான்வே தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த லியுஸ் டு ப்ளூயும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களுடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் வியான் லுப் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் வேகமும் குறையத்தொடங்கியது. இதில் வியான் லூப் 17 ரன்களுக்கும், நிதானமாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய டொனோவன் ஃபெரீராவும் தனது பங்கிற்கு 26 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் டேவிட் வைஸும் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஜெரால்ட் கோட்ஸி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்துள்ளது. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் பிரெனலன் சுப்ராயென், கேசவ் மஹாராஜ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.