எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ்-கேப்பிட்டல்ஸ் போட்டி மழையால் ரத்து!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வில் ஜேக்ஸ் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கைல் வெர்ரைன் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ரைலீ ரூஸோவ் ஒரு ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 22 ரன்னிலும், மார்கஸ் ஆக்கர்மேன் 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்ப கைல் வெர்ரைன் 6 பவுண்டரிகளுடன் 39 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஜிம்மி நீஷம் தனது அதிரடியை வெளிப்படுத்தி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், செனுரன் முத்துசாமி 8 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்களில் மிகைல் பிரிட்டோரியஸ் 10 ரன்களையும், ஈதன் போஷ் ஒரு ரன்னை சேர்த்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் டோனவன் ஃபெரீரா மற்றும் மோயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாட இருந்த நிலையில் மழை பெய்த காரணத்தால் இப்போட்டியானது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.