எஸ்ஏ20 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய போட்ஜிட்டர்; கேப்டவுனை வீழ்த்தியது ஈஸ்டர்ன் கேப்!
தென் ஆப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஐடன் மாக்ரம் தலைமையிலான நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், ரஷித் கான் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் மற்றும் ரஸ்ஸி வென்டர் டுசென் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் வென்டர் டுசெனுடன் இணைந்த கானர் எஸ்டெர்ஹூய்சென் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் கானர் எஸ்டெர்ஹூய்சென் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ரஸ்ஸி வென்டர் டூசெனும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த காலின் இங்க்ரம் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் இணை சிறப்பாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அபாரமாக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். அதேசமயம் மறுமுனையில் 22 ரன்களை எடுத்த கையோடு காலின் இங்க்ரம் விக்கெட்டை இழக்க, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரீவிஸ் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 56 ரன்களில் பிரீவிஸின் விக்கெட்டை மார்கோ ஜான்சன் கைப்பற்றினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் மற்றும் கேப்டன் ரஷித் கான் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதியில் அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜ் லிண்டே 23 ரன்களையும், டெலானோ போட்ஜிட்டர் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் மார்கோ ஜான்சன், ரிச்சர்ட் கிளீசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் ஜொர்டன் ஹார்மன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோர்டன் ஹார்மன் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெலும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 12 ரன்களுடன் ஆட்டமிழக்க, அந்த அணி 16 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் ஸ்டப்ஸ் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த ஐடன் மார்க்ரமும் 19 ரன்களிலும், மார்கோ ஜான்சன் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டவுன் தரப்பில் டெலானோ போட்ஜிட்டர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.