SA20 League: பார்ல் ராயல்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!

Updated: Sat, Jan 21 2023 20:37 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - எம் ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பார்ல் ராயல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் மில்லர் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணியில் ரையன் ரிக்லெடன், டெவால்ட் பிரீவிஸ், சாம் கரண் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த கிராண்ட் ரோலோஃப்சென் - ரஸ்ஸி வெண்டர் டுசென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 34 ரன்களில் ரோலோஃப்சென் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜார்ஜ் லிண்டே தனது பங்கிற்கு 24 ரன்களையும், கேப்டன் ரஷித் கான் 13 ரன்களையும் சேர்த்தனர்.

அதன்பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெண்டர் டுசென் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் எம் ஐ கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, ஆடம்ஸ், தப்ரைஸ் ஷம்ஸி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியில் ஜேசன் ராய் 4, விஹான் லூப், டேன் விலாஸ், வான் பிரௌன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்ப, மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருடன் இணைந்த கேப்டன் டேவிட் மில்லரும் ஓராளவு தாக்குப்பிடித்து 26 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய எவான் ஜோன்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் சரசரவென உயர்ந்தது. 

அதன்பின் 19ஆவது ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் 68 ரன்களைச் சேர்த்திருந்த ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இறுதியில் அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. கேப்டவுன் தரப்பில் கடைசி ஓவரை வீசிய ஓடியன் ஸ்மித் அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்ல் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியளில் 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை