SA20 League: அரைசதத்தை தவறவிட்ட வெண்டர் டுசென்; பார்ல் ராயல்ஸுக்கு 143 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - எம் ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பார்ல் ராயல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் மில்லர் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணியில் ரையன் ரிக்லெடன், டெவால்ட் பிரீவிஸ், சாம் கரண் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கிராண்ட் ரோலோஃப்சென் - ரஸ்ஸி வெண்டர் டுசென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 34 ரன்களில் ரோலோஃப்சென் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜார்ஜ் லிண்டே தனது பங்கிற்கு 24 ரன்களையும், கேப்டன் ரஷித் கான் 13 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெண்டர் டுசென் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் எம் ஐ கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது.
பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, ஆடம்ஸ், தப்ரைஸ் ஷம்ஸி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.