SA20 League: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்; ஆறுதலளித்த டூ பிளெசிஸ் அரைசதம்!
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் ரீஸா ஹென்றிக்ஸ் முதல் பந்திலேயும், டு ப்ளூய் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்த கையோடு, 22 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கைல் வெர்ரெய்ன், லூயிஸ் கிரிகோரி, ரோமாரியோ செஃபெர்ட், கோட்ஸீ ஆகியோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, நம்பிக்கை நட்சத்திரமான டொனாவன் ஃபெரீராவும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இறுதியில் ஆரோன் பங்கிசோ - நந்த்ரே பர்கர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் அவர்களால் 26 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பங்கிசோ 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 19 ரன்களை எடுத்திருந்தார்.
இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜிம்மி நீஷம் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.