SA20 League: கேப்டவுனை வீழ்த்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!

Updated: Tue, Jan 24 2023 11:56 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு வில் ஜேக்ஸ் - குசால் மெண்டீஸ் இணை தொடக்கம் தந்தனர். இதில் இருவரும் ஆரம்பத்திலேயே கொடுத்த அடுத்தடுத்த கேட்ச்சுகளை கேப்டவுன் வீரர்கள் தவறவிட்டனர். 

அதன்பின் அதிரடி காட்டத் தொடங்கிய இருவரும் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு அசத்தினர். அதிலும் காகிசோ ரபாடா, ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற அசுர வேகப்பந்துவீச்சாளர்களின் ஓவர்களை அடித்து நொறுக்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி பவர்பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்களைக் குவித்தது. அதன்பின் பந்துவீச வந்த எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டன் ரஷித் கான் தனது முதல் ஓவரிலேயே 29 ரன்களைச் சேர்த்திருந்த குசால் மெண்டீஸின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பின்னர் 27 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகள் என 62 ரன்காளைச் சேர்த்திருந்த வில் ஜேக்ஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த ரைலீ ரூஸோவும், ஃபோர்டுயினின் விக்கெட்டுகளையும் ரஷித் கான் கைப்பற்றி, டி20 கிரிக்கெட்டில் 500ஆவது விக்கெட்டையும் வீழ்த்தினார். 

அதனைத் தொடர்ந்து முத்துசாமி 3, தியூனிஸ் டி ப்ரூயின் 36, வெய்ன் பார்னெல் 1 ஆகியோரது விக்கெட்டுகளை ஜோஃப்ரா ஆர்ச்சர் கைப்பற்றி அணியின் ஸ்கோர் வேகத்தைக் குறைத்தார். இறுதியில் ஜேம்ஸ் நீஷம் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகளுன் 22 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. எம்ஐ கேப்டவுன் தரப்பில் ரஷித் கான், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளையும், ஓடியன் ஸ்மித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கேப்டவுன் அணியில் தொடக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ரியான் ரிக்லெடன் 12, சாம் கரண் 22, ரஸ்ஸி வெண்டர் டுசென் 24 என விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ப்ரீவிஸ் 46 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அதன்பின் களமிறங்கிய ஜார்ஜ் லிண்டே, ஓடியன் ஸ்மித், ரஷித் கான் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 18.1 ஓவர்களில் எம்ஐ கேப்டவுன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் வெய்ன் பார்னெல், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 23 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை