விராட் கோலி சாதிப்பதற்கு நிறைய உள்ளன - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்தார்.
மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரரான சச்சினின் சாதனையை தகர்த்து விராட் கோலி புதிய சாதனை படைத்தார். இந்த வரிசையில் விராட் கோலி 50 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் 49 சதங்களுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் தம்முடைய உலக சாதனைகளை தகர்த்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
எனவே 2023 உலகக்கோப்பை தோல்வியை வைத்து அவருடைய கேரியரை யாரும் முடிவு செய்ய வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "விராட் கோலி 50ஆவது சதத்தை அடித்ததில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த சமயத்தில் அவருடைய பயணம் இத்துடன் நின்று விடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட இருக்கிறார். அவரிடம் நாட்டுக்காக இன்னும் சிறப்பாக விளையாடி நிறைய சாதனை செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வேட்கை அதிகமாக இருக்கிறது. இந்தியாவுக்கு சொந்தமான சாதனை எப்போதும் இந்தியாவிடம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்" என்று கூறியுள்ளார்.