கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு கவுரம்; சச்சின் டெண்டுல்கர் பங்கேற்பு!

Updated: Tue, Jan 31 2023 13:34 IST
Image Source: Google

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆடவர் அண்டர்19 உலக கோப்பையால் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக யுவராஜ் சிங், பென் ஸ்டோக்ஸ், விராட் கோலி போன்ற ஏராளமான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு இன்று ஜாம்பவான்களாகவும் ஜொலிக்கிறார்கள். அப்படி வருங்கால இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காட்டும் தொடராக உருவெடுத்த அண்டர்19 உலகக்கோப்பை வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ஐசிசி அதை இந்த வருடம் மகளிர் கிரிக்கெட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று துவங்கிய வரலாற்றின் முதல் மகளிர் அண்டர்-19 டி20 உலக கோப்பையில் உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. அதில் ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணிலீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று சூப்பர் 6 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இலங்கைக்கு எதிரான முக்கிய போட்டியில் பெரிய வெற்றியை பதிவு செய்து ரன் ரேட் அடிப்படையில் நாக் அவுட் சுற்று தகுதி பெற்றது. 

இந்தியா அரையறுதியில் காலம் காலமாக ஆடவர் அணிக்கே சவாலை கொடுத்து வரும் நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு முன்னேறியது. அதைத் தொடர்ந்து ஜனவரி 29ஆம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் மிகச் சிறப்பாக ஃபீல்டிங் செய்து பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்டு இங்கிலாந்தை 68 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா பின்னர் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் வரலாற்றின் முதல் மகளிர் அண்டர்19 உலக கோப்பையை வென்ற இந்தியா சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது. ஒட்டு மொத்த சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய வெளிநாடுகள் மட்டுமே ஐசிசி கோப்பைகளை வென்று வந்த நிலையில் முதல் முறையாக ஆசியாவிலிருந்து ஐசிசி உலக கோப்பையை வென்ற முதல் அணியாகவும் இந்தியா வரலாறு படைத்துள்ளது.

அந்த வகையில் துவண்டு கிடக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் படைத்து வளமான வருங்காலத்திற்கு ஆழமான விதை போட்ட இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த ஷஃபாலி வர்மா தலைமையிலான இளம் அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார். அத்துடன் பிப்ரவரி 1ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டி20 போட்டியில் பங்கேற்குமாறு அவர் இந்திய மகளிர் அணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் 3ஆவது டி20 போட்டிக்கு முன்பாக அண்டர் 19 உலகக்கோப்பையை வென்ர மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் நேரில் வந்து கௌரவிப்பார்கள் என்று ஜெய் ஷா மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரத ரத்னா ஸ்ரீ சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிசிசிஐ நிர்வாக அதிகாரிகள் அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியை பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் கௌரவிக்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். நமது இளம் வீராங்கனைகள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார்கள். அவர்களை சாதனைகளை நாம் கௌரவிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை