இந்திய அணி தோல்வி குறித்து காணொளி வாயிலாக விளக்கமளித்த சச்சின்!
டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இது இரண்டாவது தோல்வி. இதனால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கடினமாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணி தோல்வியடைந்த இடம் குறித்து சச்சின் டெண்டுல்கர் பேஸ்புக் பக்கத்தில் காணொளி மூலம் விளக்கமளித்துள்ளார்.
அதில் பேசிய அவர், "முதல் பந்திலிருந்தே வில்லியம்சனின் பந்துவீச்சு மாற்றம் பிரமாதமாக இருந்தது. திட்டம் வகுத்தது நன்றாக இருந்தது. முதல் 6 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. அடுத்த 5 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. 6-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை இந்திய அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.
என்னைப் பொறுத்தவரை இந்த இடம்தான் முக்கியமான இடம். இந்த இடத்தில்தான் இந்திய அணி சரியாகக் கையாள்வதைத் தவறவிட்டது. ஓடி எடுக்கக் கூடிய எளிதான ரன்களுக்கு அங்கு இடமில்லை. அதுவே இந்திய பேட்டர்களை பெரிய ஷாட் ஆட நிர்பந்தித்தது.
ரிஷப் பந்த் களமிறங்கியவுடன் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் திசைகள் வில்லியம்சனால் மாற்றப்பட்டன. மீண்டும் ஒருமுறை புத்திசாலித்தனமான நகர்வு.
Also Read: T20 World Cup 2021
டேரில் மிட்செல் மற்றும் வில்லியம்சன் முக்கியமான பாட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். வில்லியம்சன் நியூசிலாந்துக்கு திடமான ஒரு வீரர். அவர் களத்தில் இருந்தால் ஆட்டத்தை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கிறார். மிட்செல் சில நல்ல ஷாட்களை விளையாடி, ஓடியும் ரன்கள் எடுத்தார்" என்று தெரிவித்துள்ளார்.