ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்!

Updated: Thu, Feb 02 2023 12:26 IST
Sachin Tendulkar Delivers Inspirational Speech to India U19 Women T20 World Champs! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பை தொடர் நடந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.விறுவிறுப்பாக சென்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அண்டர் 19 மகளிர் அணி 17.1 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அண்டர் 19 மகளிர் அணி 14ஆவது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

அது மட்டுமின்றி, முதல் முறையாக அண்டர் 19 மகளிர் அணிக்காக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையை இந்தியா அண்டர் 19 மகளிர் அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இந்தியா அண்டர் 19 ஆண்கள் அணியும் இதே போன்று முதல் முறையாக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக தொடங்கப்பட்ட மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அண்டர் 19 அணி மற்றும் துணை ஊழியர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கபட்டது. உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கிரிக்கெட் பிரபலங்களான ராகுல் டிராவிட், பிரித்வி ஷா ஆகியோர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அண்டர் 19 அணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, டி20 போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய மகளிர் அண்டர் 19 அணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், “இப்படியொரு அற்புதமான சாதனையை நிகழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியை நாடே கொண்டாடும். என்னைப் பொறுத்தவரையில் எனது கனவு 1983 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த உலகக் கோப்பையை வென்றதன் மூலமாக நீங்கள் உங்களது கனவுகளை பெற்று விட்டீர்கள்.

 

இந்த வெற்றியின் மூலமாக இந்திய பெண்களுக்கு விளையாட்டு மீது ஆர்வம் வரவும், அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது கனவை நனவாக்கவும் வழிவகுத்துவிட்டீர்கள். விளையாட்டில் மட்டுமின்றி அனைத்திலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும்” வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இறுதியாக வெற்றி பெற்ற இந்திய மகளிர் மற்றும் துணை ஊழியர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி, துணை தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை