இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதியில் விளையாடும் - சச்சின் ஓபன் டாக்!

Updated: Tue, Oct 18 2022 13:06 IST
Sachin Tendulkar Names His Top Contenders For The ICC T20 World Cup 2022 (Image Source: Google)

டி20 உலக கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் கடந்த 16ம் தேதி முதல் நடந்துவருகிறது. வரும் 22 முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்ற 8 அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன.

இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெ தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்த டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். 

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவலுவாக உள்ளது. அஸ்வின், அக்ஸர் படேல், சாஹல் என தரமான ஸ்பின்னர்களையும், புவனேஷ்வர் குமார், ஷமி, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய சிறந்த ஃபாஸ்ட்பவுலர்களையும் பெற்றுள்ளது. 

பும்ரா ஆடாததால் டெத் ஓவர் கவலை இருந்துவந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் கடைசி ஓவரில் துல்லியமான யார்க்கர்களை வீசி 3 விக்கெட் வீழ்த்தி 11 ரன்களை அடிக்கவிடாமல் முகமது ஷமி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து நம்பிக்கை கொடுத்தார். 

இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளும் வலுவாக திகழ்கின்றன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் (பாபர் அசாம் - முகமது ரிஸ்வான்), ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் ஆகியவை வலுவாக உள்ளது. 

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் மிரட்டலான அணியாக திகழ்கிறது. பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், மொயின் அலி ஆகியோர் செம ஃபார்மில் அபாரமாக விளையாடி வருகின்றனர். பந்துவீச்சில் ரீஸ் டாப்ளி, மார்க் உட், டேவிட் வில்லி, சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீத், கிறிஸ் ஜோர்டான் என சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. 

அதேபோல் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக், டேவிட் மில்லர் ஆகிய அதிரடி வீரர்கள் மிரட்டலான ஃபார்மில் உள்ளனர். ரபாடா, நோர்ட்ஜே ஆகியோருடன் மார்கோ யான்செனும் பவுலிங்கிற்கு வலுசேர்ப்பார். ஸ்பின் பவுலிங்கில் ஷம்ஸி மற்றும் கேஷவ் மஹராஜ் வலுசேர்க்கின்றனர். எனவே டி20 உலக கோப்பையை வெல்வதற்கான போட்டி அணிகளுக்கு இடையே கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், டி20 உலக கோப்பை குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், சச்சின் டெண்டுல்கரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்திய அணி குறித்து பேசிய அவர், “ஷமி மிகச்சிறந்த பவுலர். பும்ராவுக்கு சரியான மாற்று வீரர் ஷமி. நல்ல ஸ்டிரைக் பவுலர் ஷமி. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நீண்டகாலமாக விளையாடி வருகிறார். பெரிய மற்றும் முக்கியமான போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர் ஷமி. ஷமியின் பவுலிங்கை நான் என்ஜாய் செய்து பார்ப்பேன். பும்ராவின் இடத்தை நிரப்ப ஷமி தான் சரியான வீரர் என்றாலும், ஆடும் லெவன் குறித்து என்னால் எதுவும் கூறமுடியாது” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை