தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!

Updated: Mon, Apr 17 2023 14:10 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடி அசத்தினார். சச்சின் மகன் விளையாடுகிறார் என்பதால் இந்த போட்டியை காண பெரும்பாலான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். இதில் சச்சின் மகன் அர்ஜுன் முதல் ஓவரை வீசி வெறும் நான்கு ரங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். எனினும் இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் என 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மொத்தமாக இரண்டு ஓவர்களை அர்ஜுன் டெண்டுல்கர் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் பவர்பிளேவில் அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீசினார். அர்ஜுன் டெண்டுல்கர் வேகத்தை மட்டும் கொஞ்சம் அதிகமாக வீசினால் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது மகன் அர்ஜுனுக்கு தந்தை சச்சின் ஒரு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அர்ஜுன் நீ கிரிக்கெட் வீரனாக இன்று உனது பயணத்தில் முக்கிய அடியை எடுத்து வைத்திருக்கிறாய். உன் தந்தையாக உன் மீது அதிக அன்பையும் அதேசமயம் கிரிக்கெட் மீது காதலும் கொண்டவனாக இதை சொல்கிறேன். நீ தொடர்ந்து கிரிக்கெட்டுக்கு மரியாதை கொடுப்பாய் என்று எனக்குத் தெரியும்.

அப்படி செய்யும்போது கிரிக்கெட்டும் உன்னை மீண்டும் விரும்பும். இந்த கட்டத்திற்கு வர நீ எவ்வளவு உழைத்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும். இன்னும் நீ கடுமையாக முயற்சி செய்வாய் என்றும் எனக்கு தெரியும். இது உன்னுடைய அழகான பயணத்தின் சிறப்பான தொடக்கம். நன்றாக விளையாடு” என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

 

சச்சினின் மகனுக்கு கங்குலியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “மும்பை அணிக்காக சச்சின் மகன் விளையாடுவது பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சாம்பியன் ஆன தந்தைக்கு இது பெருமைமிக்க தருணமாகும். அவருக்கு என் வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை