இந்த தோல்வி ஜீரணிக்க மிகவும் கடினமான ஒன்றாகும் - சச்சின் டெண்டுல்கர்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடைபெற்ற நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா அணியும் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னார் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 174 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்காக நியமிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்று அசத்திய நியூசிலாந்து அணிக்கு முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைவது எப்போது மிகவும் ஜீரணிக்க முடியாத ஒரு விஷயமாகும். மேலும் இந்த தோல்வி அணியில் உள்ள அனைத்து வீரர்களின் சுயபரிசோதனைக்கும் அழைப்பு விடுக்கிறது.
மேலும் இந்த தோல்விக்கு காரணம் தயாரிப்பின்மையா, மோசமான ஷாட் தேர்வா, அல்லது மேட்ச் பயிற்சி இல்லாததா? என்பதே எனது கேள்வி. ஷுப்மன் கில் முதல் இன்னிங்ஸிலும், ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் ரிஷப் பந்த் விளையாடும் போது அந்த பிட்ச் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. மேலும் அவர் அங்கு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசயம் இத்தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்திற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துகொள்கிறேன். ஏனெனில் இந்தியாவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவது என்பது ஒரு அணிக்கு மிகவும் நல்ல முடிவாகும். அதனைச் நியூசிலாந்து அணி செய்து காட்டியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் இந்த எக்ஸ் பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.