இந்த இரண்டு விஷயம் என்னை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளது - சச்சின் டெண்டுல்கர் எமோஸ்னல்!
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். கடந்த இரண்டு தசாப்தங்களாக கிரிக்கெட் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்த வீரர்.
இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதங்களையும், 461 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களையும் குவித்துள்ளார். இந்நிலையில் இவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த இரண்டு விஷயங்கள் மிகவும் வருத்தப்பட வைத்ததாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சச்சின், “எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பல சாதனைகளை செய்துள்ளேன். இருப்பினும் இந்த இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் வருத்தப்பட வைத்தது.
அதில் ஒன்று நான் சுனில் கவாஸ்கருடன் ஒருபோதும் விளையாடியதில்லை. நான் கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்னதாக கவாஸ்கர் எனது பேட்டிங் ஹீரோவாக இருந்தார். ஆனால் நான் அறிமுகமாவதற்கு முன்பே அவர் ஓய்வை அறிவித்து விட்டார். ஒரு அணியின் ஒரு பகுதியாக அவருடன் விளையாடாதது வருத்தமாகவே இருக்கிறது.
எனது மற்றொரு வருத்தமானக்து, என்னுடைய குழந்தை பருவ ஹீரோ சர் விவியன் ரிச்சர்ட்ஸுக்கு எதிராக விளையாடாதது தான். கவுண்டி கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம், ஆனால் ஒரு சர்வதேச போட்டியில் கூட அவருக்கு எதிராக விளையாட முடியாமல் போனது எனக்கு இருக்கும் மிகப்பெரிய வருத்தம்” என்று தெரிவித்துள்ளார்.