சிபிஎல் 2023: ராஜபக்ஷா, காலின் முன்ரோ அரைசதம்; செயிண்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கயானா அமேசன் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ நந்து 3 ரன்களுக்கும், சைம் அயுப் 16 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஷாய் ஹோப் - அசாம் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷாய் ஹோப் 38 ரன்களிலும், அசாம் கான் 40 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் வந்த ஷிம்ரான் ஹெட்மையர் 19 ரன்களையும், கீமோ பால் 19 ரன்களையும், ரொமாரியோ செஃபெர்ட் 10 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது. செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் ஓரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த காலின் முன்ரோ - பனுகா ராபகஷா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடது அசத்தினர்.
அதன்பின் 55 ரன்கள் எடுத்த நிலையில் காலின் முன்ரோ விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 86 ரன்களை விளாசிய பனுகா ராஜபக்ஷ ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த சீன் வில்லியம்ஸ் - சிக்கந்தர் ரஸா ஆகியோர் அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பனுகா ராஜபக்ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.