ஓரங்கட்டப்பட்ட வீரருக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்கும் ரசிகர்கள்; பிசிசிஐ-க்கு தலைவலி!
டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் இறுதியில் தொடங்கவுள்ளது. இதற்கான அணிகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கொடுத்தாக வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டிருந்த நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
ஆசியக் கோப்பையில் இடம்பெற்றிருந்த அதே பேட்டிங் வரிசைதான் டி20 உலகக் கோப்பையிலும் தேர்வு செய்துள்ளனர். இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு நிச்சயம் இடம் இருக்கும் என்றுதான் பலர் நினைத்தார்கள். காரணம், சாம்சன் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர். ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும் என்பதால், இவருக்கு நிச்சயம் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கும் எனக் கருதப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்தபடி சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவரின் இடத்தில் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார். குறைந்தபட்சம் ரிசர்வ் வீரர் பட்டியலில் கூட சாம்சன் பெயர் இடம்பெறவில்லை. எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி வரும் ஸ்ரேயஸ் ஐயருக்கு கூட ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், கடும் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள், சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காத பிசிசிஐயை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும் எனக் கூறி அவரது ரசிகர்கள் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.
அந்த போராட்டம் வரும் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியின்போது மைதானத்திலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சன் கேரளத்தைச் சேர்ந்தவர். இவர் திருவனந்தபுரத்திற்கு விளையாட வரும்போதெல்லாம் சாம்சனுக்காகவே பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இதனால், 28ஆம் தேதி நிச்சயம் பெரும்பாலான ரசிகர்கள் கூடி, சாம்சனுக்கு ஆதரவாக கோஷமிடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
ஒருவேளை இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம்பெறும் பட்சத்தில், இதேபோல் எப்போதெல்லாம் ஒரு வீரர் அணியிலிருந்து நீக்கப்படுகிறாரோ, அப்போதெல்லாம் போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள போட்டி நிச்சயம் பிசிசிஐக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனால், இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.